குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்புமனு இன்று தொடக்கம்: ஜூலை 18ல் தேர்தல்
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
தற்போதைய தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜுலை 24ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவர் தேர்வு செய்து பதவியேற்க வேண்டும். இந்தியாவில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவரை மக்கள் நேரடியாக தேர்வு செய்யாமல், மக்கள் பிரதிநிதிகள் அவர்களை தேர்வு செய்கிறார்கள்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களான அனைத்து உறுப்பினர்களும், அதேபோல், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வார்கள். அதேபோல், மக்களவை, மாநிலங்களவை, சட்டபேரவை ஆகியவற்றில் நாமினேடட் உறுப்பினர்கள் எனப்படும் நியமன உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது.
இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 21ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி இம்மாதம் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனு திரும்பப் பெறும் கடைசி தேதி ஜூலை 2ஆம் தேதி ஆகும்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யாரை வேட்பாளராக நிறுத்தும் என எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியலும் நிலவுகிறது. இதேபோல், எதிர்க்கட்சிகள் இடையேயும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பான ஒத்திசையான கருத்து இல்லை என்பதால் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவாகவே உள்ளது.