மக்களின் பிரச்சினைக்கு முதலில் தீர்வு வேண்டும்! ’21’ தொடர்பில் மஹிந்த கருத்து.
“அரசமைப்பின் 21ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தும் யோசனை 21ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அதற்கு ஆதரவளிக்கும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
தனது கட்சி உறுப்பினர்கள் குழுவுடனான கலந்துரையாடலின்போதே மஹிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்தார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் சிங்கள ஊடகம் ஒன்றிடம் கூறினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியதைத் தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்தது.
ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை என்பன பொதுமக்களால் முற்றுகையிட்டப்பட்டு மிகவும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த மே மாதம் 9ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இதில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 300 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை வெடித்த தினமான மே 9ஆம் திகதி பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச இராஜிநாமா செய்திருந்தார்.