ஆழ்துளை கிணற்றில் பாம்புகளுடன் 104 மணி நேரம் போராடிய சிறுவன்! மீட்கப்பட்டது எப்படி? குவியும் பாராட்டு
இந்தியாவில் 80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 104 மணி நேரமாக தவித்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவனின் துணிச்சலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி – ஷம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல் சாஹு. கடந்த கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் ராகுல் தவறி விழுந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் சுரங்கம் தோண்டும் பணி நடந்தது.
பின்னர் அந்த சுரங்கம் வழியே சிறுவன் சிக்கி இருந்த இடத்திற்கு டிரில் மிஷன் மூலம் துளை போட்டு மீட்பு படையினர் சென்றனர். முன்னதாக ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பிய மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிறுவனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மீட்பு பணியை ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டன.
இதனையடுத்து 104 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் ராகுல் ஷாஹுவை உயிருடன் மீட்ட மீட்பு படையினர், சுரங்கம் வழியே வெளியே கொண்டு வந்தனர். தற்போது ராகுல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்நிலையில் பல்வேறு சவால்களை சந்தித்தபடியே சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்திருக்கிறான். ஏனெனில் அங்கு பாம்புகளும், தவளைகளும் இருந்திருக்கிறது. சிறுவனின் ராகுலின் துணிச்சலை மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பகேல் பாராட்டியுள்ளார்.
மேலும், ராகுலை மீட்டு சவாலான காரியத்தை முடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். அனைவரின் பிரார்த்தனையாலும், மீட்புக் குழுவினரின் அயராத அர்ப்பணிப்பு முயற்சியாலும் ராகுல் சாஹு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என தெரிவித்துள்ளார்.