ஆஸ்திரேலியாவுக்கான விசா விண்ணப்ப பரிசீலனைக் காலப்பகுதி அதிகரிப்பு!
ஆஸ்திரேலியாவிற்கான Skilled recognised graduate visa (subclass 476) விசாவிற்கு விண்ணப்பிக்கும் ஒருவர், அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி 41 மாதங்கள் ஆகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Subclass 476 விசா என்பது, வெளிநாடுகளிலுள்ள பொறியியல்துறை பட்டதாரிகள், ஆஸ்திரேலியாவில் சுமார் ஒன்றரை ஆண்டுகள்வரை தங்கியிருந்து கல்விகற்க அல்லது பணிபுரிய அனுமதிக்கும் விசாவாகும்.
இவ்வாறு ஆஸ்திரேலியா வருவதற்கு விண்ணப்பித்துவிட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள்வரை காத்திருக்க நேரிடுவதால், வெளிநாட்டு பொறியியல்துறை பட்டதாரிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் அதேநேரம் அவர்களது காலமும் விரயமாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 12 மாதங்களில் பொறியியல்துறை சார்ந்த வேலை வெற்றிடங்களில் சுமார் 97 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக Engineers Australia அமைப்பு தெரிவித்துள்ளதுடன் பொறியிலாளர்களுக்கான பற்றாக்குறையும் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வருவதற்குத் தயாராகவுள்ள பொறியியலாளர்களும் அதற்குரிய விசாவைப் பெறுவதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளதால், நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய பல கட்டுமானப்பணிகள் தாதமடைய நேரிடலாம் என Engineers Australia சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் என பல நாடுகளைச் சேர்ந்த பல பட்டதாரிகள், இவ்விசாவைப் பெறுவதற்காக தாம் இன்னமும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளதுடன், தமது விசா தொடர்பில் உள்துறை அமைச்சிடம் தொடர்புகொண்டு பேச முடியாமலுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வரை காத்திருக்க நேரிடுவதால், இடையிடையே புதுப்புது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தற்போது சுமார் 6000 பேரது விண்ணப்பங்கள் இன்னமும் பரிசீலிக்கப்பட வேண்டிய நிலையில் உள்துறை அமைச்சுவசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் பற்றாக்குறை மற்றும் கொரோனா பரவல் போன்றவை காரணமாகவே, விசா விண்ணப்ப பரிசீலனை காலப்பகுதி கடந்த 2018 முதல் இந்தளவிற்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.