120 மில்லியன் டொலர்களை புதிய கடனாக வழங்க அமெரிக்கா ஒப்புதல்.
இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை உருவாக்கவும் ஆதரவளிக்கவும் இலங்கைக்கு 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய கடனாக வழங்க இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபை புதிய முதலீடுகளுக்கான கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
எழுபது ஆண்டுகளாக, இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அமெரிக்கா வெளிநாட்டு உதவிகள், கடன்கள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை வழங்கி வருகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
“இன்றைய அறிவிப்பு தனியார் துறைக்கு ஒரு நல்ல செய்தியாகும், இந்த 120 மில்லியன் டொலர்கள் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களைச் சென்றடையும் . மேலும் இத்துறையில் எதிர்கொள்ளும் உடனடி சவால்களை சமாளிக்க வாய்ப்பு ஏற்படும் ” என்று அவர் கூறினார்.