ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாமில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் மரணம்.
துருக்கிய பின்னணி கொண்ட 32 வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞர் துருக்கிக்கு நாடுகடத்தப்படும்நோக்கில், கடந்த 3 ஆண்டுகளாக பெர்த்திற்கு அருகிலுள்ள இத்தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக Refugee Action Coalition தெரிவித்துள்ளது.
நேற்றிரவு குறித்த தடுப்புமுகாமிலிருந்த மற்றொரு நபருடன் ஏற்பட்ட மோதலின்போதே இவ்விளைஞர் கத்திக்குத்துக்கு இலக்கானதாக குறிப்பிடப்படுகிறது.
தடுப்புமுகாமிலுள்ள பெரும்பாலானவர்களின் விசாக்கள் குடிவரவுச்சட்டம் பிரிவு 501-இன் கீழ் நடத்தை(Character) அடிப்படையில் ரத்துசெய்யப்பட்டு நாடுகடத்தப்படும் நோக்கில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய நீதி அமைப்பின் கீழ், குற்றம் இழைத்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்த பின் விடுவிக்கப்படுவதாகவும், ஆனால் குடிவரவு தடுப்புமுகாமைப் பொறுத்தவரை அதற்கு வழியில்லை எனவும், காலவரையறையின்றி தடுத்துவைக்கப்படும் பலர் தற்கொலை, கொலை போன்றவற்றினால் தமது உயிர்களைக்கூட இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் Refugee Action Coalition-இன் Ian Rintoul தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாம்களில் இடம்பெறும் தற்கொலைச் சம்பவங்கள், தற்கொலை முயற்சிகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.