பேரறிவாளன் விடுதலைக்கு முன் குற்றஉணர்வு! அற்புதம்மாள் காலை தொட்டு வணங்க வேண்டும்: இயக்குனர் மிஷ்கின்
பேரறிவாளனை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், அவரது தாயாரின் காலை தொட்டு வணங்க வேண்டும் என்றும் பிரபல இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், கடந்த மே 18ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி விடுதலையானார். அவரை விரைவில் நேரில் சந்திக்க உள்ளதாக இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர் கூறுகையில், ‘பேரறிவாளன் விடுதலை குறித்து உதயநிதியிடம் பேசுங்கள் என அற்புதம்மாள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இப்போது நான் அவரிடம் சென்று பேச முடியாதுமா, இப்போது தான் அவர் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருக்கிறார். இதைக் கூறினால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை என கூறி அவரை தவிர்த்து வந்தேன்.
பின்னர் ஒருமுறை வெற்றிமாறனிடம் இதுகுறித்து பேசினேன். உதயநிதியிடம் சென்று பேசலாம் என்று அவரை அழைத்தேன். ஆனால் அவரும் நான் கூறியதைத் தான் சொன்னார். அதாவது, நாம் வெளியே இருந்து கேட்கிறோம். ஆனால் உள்ளே எவ்வளவு பிரச்சனைகள் சட்ட ரீதியாக உள்ளது என்பது நமக்கு தெரியாது என அவர் கூறினார்.
அதன் பின்னர் உதயநிதியை சந்தித்த வேளையில் பேரறிவாளன் விடுதலை குறித்து பேசிவிட்டேன். அப்போது அவர், நாங்களும் அதற்காக தான் அண்ணா பார்த்துக் கொண்டிருக்கிறோம் என கூறினார். இப்போது ஒருவழியாக அது நடந்துவிட்டது. அவர் வெளியே வர வேண்டும் என்ற தமிழகம் முழுவதுமான பிரார்த்தனை பலித்துவிட்டது’ என கூறினார்.
மேலும் அவர் பேசும்போது, ‘தன் மகனுக்காக 30 ஆண்டுகள் அற்புதம்மாள் என்ற அந்த தாய் போராடியதை நாம் பார்த்தோம். எப்படியோ ஒரு தாயின் கண்ணீரில் உருகி இயற்கையே பேரறிவாளன் வெளிய வர செய்துவிட்டது. அது மிகவும் மகிழ்ச்சியான நாள். பேரறிவாளனுடன் நான் பேசியிருக்கிறேன். அவர் முகத்தை பார்த்தாலே தெரியும் அவர் எவ்வளவு அன்பானவர் என்று. அவரை நேரில் சந்திக்க வேண்டும், அற்புதம்மாளின் காலை தொட்டு வணங்க வேண்டும்.
அவர் உள்ளே இருக்கும் வரை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற குற்றஉணர்வு எனக்கு இருந்தது. 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த ஒரு நிரபராதி வெளியே வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.