ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு கடத்தவிருந்த ஆயுதங்கள் தலீபான்களிடம் சிக்கின.
அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை நடத்தினர். இந்த கொடிய தாக்குதல்களில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் தலீபான்கள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.
அங்கு தலீபான்கள் ஆட்சியை அமெரிக்கா அகற்றி ஜனநாயக ஆட்சியை நிறுவியது. 20 ஆண்டு காலமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்டு மாதம் விலக்கிக்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து அங்கு தலீபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டனர். ஆப்கானிஸ்தானில் இருந்து விடைபெற்றுச்செல்லும்போது, அமெரிக்க படைகள் தங்களது ஆயுதங்களையும், தளவாடங்களையும் அப்படியே விட்டுச்சென்று விட்டன.
ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்ட ராணுவ தளங்களில் இருந்து ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் ஆயுத கடத்தல்காரர்கள் சேகரித்து, அவற்றை ஆப்கானிஸ்தான் அரசிடம் இருந்தும், தலீபான்களிடம் இருந்தும் வாங்கி ஆயுதச்சந்தைக்கு, குறிப்பாக ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆயுதச்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர் என தகவல்கள் கூறுகின்றன.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு அந்த ஆயுதங்கள் கடத்தப்பட வாய்ப்பு உள்ளது, அந்த ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பயன்படுத்தக்கூடும் என கனடாவை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற சர்வதேச உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பேரவை எச்சரித்தது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் பெருமளவிலான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் தலீபான்கள் கைப்பற்றி உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் உளவு அமைப்பான உளவுத்துறை பொது இயக்குனரகம், இந்த ஆயுதங்களும், வெடி மருந்துகளும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு கடத்தப்பட இருந்ததாக நம்புகிறது.