போருக்கு மத்தியில் உக்ரைன் சென்ற 4 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்.
ஐரோப்பாவின் முக்கிய தலைவர்களான பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் போலந்தில் இருந்து நேற்று ரெயில் மூலமாக உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்றடைந்தனர். அவர்களுடன் ருமேனியா அதிபர் கிளாஸ் ரோஹனீசும் சேர்ந்து கொண்டார்.
அவர்கள் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் உக்ரைனுக்கும், அந்த நாட்டின் மக்களுக்கும் உதவ முன்வந்துள்ளனர். போரின் தொடக்கத்தில் ரஷியாவினால் கைப்பற்றப்பட்ட இர்பின் நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
அங்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நிருபர்களிடம் பேசும்போது, “இங்கு ரஷிய படைகளின் இனப்படுகொலைகளைத் தொடர்ந்து போர்க்குற்றங்கள் நடந்திருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த நகரத்தை பேரழிவுக்கு வழிநடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். தலைநகரை தாக்குவதில் இருந்து ரஷிய படைகளை தடுத்து நிறுத்திய இர்பின், கீவ் மக்களின் தைரியம் பாராட்டுக்குரியது” என தெரிவித்தார். “சுதந்திரத்துக்காக போராடுகிற உக்ரைனுக்கு தேவைப்படும் வரையில் உதவிகள் செய்யப்படும்” என்று ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் உறுதி அளித்தார்.