சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ராஜேந்தர்.
இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் மருத்துவச் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் மகன் சிம்பு கூறியதால் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் அண்மையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் டி.ராஜேந் தர். அதன் பின்னர் அவரது உடல்நலம் தேறியது.
இதையடுத்து அமெரிக்காவில் சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தார் முடிவு செய்தனர். அதன்படி, அண்மையில் நடிகர் சிம்பு அங்கு சென்று சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
“நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தது கிடையாது. ஆனால் பல நாள்களுக்கு முன்பே நான் அமெரிக்கா சென்றுவிட்டதாக கதை பரப்பிவிட்டனர். யார் என்ன எழுதினாலும் விதியை மீறி எதுவும் நடக்காது,” என்றார் ராஜேந்தர்.
தம்மைப் பற்றி எந்த வதந்திகள் வந்தாலும் ரசிகர்கள் அதை நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்ட அவர், சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய பின்னர் மீண்டும் செய்தியாளர் களைச் சந்திப்பதாகத் தெரிவித்தார்.
“நான் வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவதற்கு எனது மகன் சிலம்பரசன்தான் காரணம். சிம்பு கேட்டுக்கொண்டதால்தான் ஒப்புக்கொண்டேன். தன் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு பெற்றோருக்காக 12 நாள்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறான்.
“என் மகனை நான் மன்மதனாக மட்டும் வளர்க்கவில்லை. மரியாதை தெரிந்தவனாகவும் வளர்த்துள்ளேன். சிம்பு படத்தில் வல்லவன், நிஜத்தில் நல்லவன். பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் மகன்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் என் மகன் பெற்றோருக்காக கடினமாக உழைத்து வருகிறான்.
“இப்படி ஒரு மகனைப் பெற்றதற்கும் குருவாக இருந்து ஒரு நல்ல சிஷ்யனை உருவாக்கியதற்கும் நான் பெருமைப்படுகிறேன்,” என்றார் டி.ராஜேந்தர்.