பொலிஸாரின் கடமைக்கு இடையூறு: பல்கலை மாணவர்கள் 4 பேர் கைது!
பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின்போது பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்துக்குள் நுழையும் விளையாட்டு இரசிகர்களின் அனுமதிச் சீட்டுகளை பரிசோதித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மதுபோதையில் வந்த குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கடுமையான வார்த்தைகளால் அச்சுறுத்தி ஆவேசமாகவும், கலவரமாகவும் நடந்துகொண்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நிலைமையைக் கட்டுப்படுத்த முற்பட்ட வேளையில் தமது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நால்வரும் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் 4ஆம் வருடத்தில் கல்வி பயிலும் 3 மாணவர்களும், மாணவி ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் குருநாகல், கொஸ்லந்த மற்றும் கெக்கிராவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் மேலும் கூறினர்.