அறுவடை கிடைத்தால் உணவுப் பஞ்சம் வராது விவசாய அமைச்சு கூறுகின்றது.

சிறுபோகத்தில் வழமையாகப் பயிரிடப்படும் ஐந்து இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில், தற்போது 4 இலட்சத்து 75 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அறுவடை கிடைக்கப்பெற்ற பின்னர், எதிர்காலத்தில் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு அல்லது உணவு நெருக்கடி ஏற்படாது என விவசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் தற்போதும் சிறுபோகத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பை உரியவாறு அடையாளம் கண்டு அவற்றுக்கு உரத்தை வழங்குவதற்கான முறைமை தயாரிக்கப்படவில்லை என ஒன்றிணைந்த விவசாய சங்கத்தின் தலைவர் உபாலி ஏக்கநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், விவசாய அமைச்சர் கூறுவதுபோன்று மரவள்ளி பயிரிடல் என்பது இலங்கையில் 1970 முதல் சொல்லப்படுகின்ற கதையாகும் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்கள் வினவியபோது பதிலளித்த விவசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா, சிறுபோகத்துக்கு அவசியமான உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.