நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றத்தை நாட தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தல்
ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடவும் தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. இந்நிலையில், நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பி்ல், ‘‘பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது போல, இந்த வழக்கில் தங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. இதே கோரிக்கை தொடர்பாக ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகளை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துள்ள நிலையில், அதே விவகாரம் தொடர்பான வழக்கு நிலைக்கத்தக்கதல்ல.
இந்திய அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் இந்த விஷயத்தில் தமிழக அரசே முடிவு எடுக்க முடியும் எனக்கூற முடியாது.