சோனியா காந்தியின் சுவாச பாதையில் பூஞ்சை தொற்று பாதிப்பு.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மூச்சுக் குழாயில் பூஞ்சை தொற்று இருப்பதாக அக்கட்சி விளக்கமளித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஜூன் 2 கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். கோவிட் பாதிப்பு தொடர்பான பிரச்சனைகளில் அவதியுற்று வந்த சோனியா காந்திக்கு திடீரென மூக்கில் இருந்து அதிகளவில் ரத்த கசிவு ஏற்பட்டதால் 12-ம் தேதி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அதுதொடர்பான சிகிச்சை முறைகள் நேற்று காலை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தியின் சுவாச பாதையில் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளுக்கான சிகிச்சையுடன் சேர்த்து பூஞ்சை பாதிப்புக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதனிடையே, சுவாச பாதையில் ஏற்பட்ட பூஞ்சை பாதிப்பில் இருந்து சோனியா காந்தி மீண்டு வருவதாக கங்கா ராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. சோனியா காந்தியை மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து அவரை கவனித்து வருகின்றனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தியிடம் 3 நாளாக 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சோனியாவின் உடல்நிலையை குறிப்பிட்டு வழக்கு விசாரணையில் ஆஜராக ராகுல்காந்தி கடிதம் மூலம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அவரிடம் ஜுன் 20-ம் தேதி விசாரணை நடத்தவுள்ளனர்.
சோனியா காந்தியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜூன் 23-ம் தேதி ஆஜராக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.