கோட்டா – ரணிலுடன் இணைந்து நாம் ஆட்சி அமைக்கவேமாட்டோம் – சஜித் திட்டவட்டம்.
மக்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ளாத இந்த ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்க முடியாது எனவும், அவர்கள் மக்களுடன் விளையாடிக் கொண்டே இருக்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாட்டில் உணவு மற்றும் குடிபானங்கள் தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்தல் சார்ந்து தொடர்புடைய துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை உணவு பதப்படுத்துபவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (17) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தலைவர்களால் உருவாக்கப்பட்ட ஓர் அவலத்தையே இன்று நாடு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. விஞ்ஞானபூர்வமற்ற முடிவுகளால் ஏற்பட்ட விளைவுகளின் அவலத்தை இன்று முழு நாடும் அனுபவித்து வருகின்றது.
இல்லாமைகளையும் இயலாமைகளையும் பற்றியே ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்குக் கூறுகின்றனர். அரசு இயலாமையை அறிவிப்பதையே செய்து கொண்டிருக்கின்றது.
இந்த அபாயம் குறித்து தொடர்ச்சியாக நான் உட்பட எதிர்க்கட்சி கூறிய எதனையும் அரசு செவிசாய்க்கவில்லை.
இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பணக்கார குபேரர்களுக்கு வரிச்சலுகை வழங்கியதன் விளைவுகளை நாடு எதிர்கொள்கின்றது.
நமது நாடு தரவரிசைகளில் பின்னடைவுகளைச் சந்திக்கும்போது இது ஒரு சர்வதேச சதி என்றே அரசு கூறியது.
இன்று மக்கள் வரிசைகளில் நின்று மரணிக்கும் நிலைக்கு நாடு வந்து விட்டது.
இல்லை, இயலாது மற்றும் பார்க்கலாம் எனச் சொல்லுவதற்கு அரசொன்று தேவையில்லை.
நிலையற்ற தீர்வுகளால் நாடு முன்னேறாது. மக்கள் ஆணையின் மூலம் கிடைக்கப்பெறும் தீர்வே ஒரே தீர்வு” – என்றார்.