ராஜபக்ச குடும்பத்தினர் வீட்டுக்கு சென்றால்தான் நாட்டுக்கு விடிவு! மலையகத் தொழிலாளர் முன்னணி தெரிவிப்பு.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் வெளியே சென்றால் மாத்திரமே நாட்டுக்கு விடிவு கிடைக்கும் என்று மலையகத் தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட அனைத்து விடயங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. வரிசை யுகம் நீடித்துக்கொண்டே செல்கின்றதே தவிர குறைந்ததாகத் தெரியவில்லை.
இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சுமுகமான நிலைமைக்குக் கொண்டுவர முடியாத இந்த அரசு முதலில் வெளியேற வேண்டும். தொடர்ந்தும் இந்த அரசு இருந்து என்னதான் பயன்?
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் வெளியே சென்றால் மாத்திரமே வெளிநாடுகளில் உள்ளவர்கள் இலங்கைக்கு உதவி செய்ய முன்வருவார்கள். அப்போதுதான் நாட்டில் பஞ்சம் தீர்க்க வழி பிறக்கும்.
எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், மலையகம் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு அவர்களின் தேவைகளைப் பூரத்தி செய்து தருவதாகவே வாக்குறுதி வழங்கப்படுகின்றது. அதேநேரத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இந்த வாக்குறுதிகளுக்கு அப்பால் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படுகின்றார்கள்” – என்றார்.