ஒற்றை தலைமை.. நான் கூறியது சிதம்பர ரகசியம் அல்ல: ஜெயக்குமார்
அதிமுகவுக்கு ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என்பதை கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமை கழக உறுப்பினர்கள் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை புரிந்தார். பொதுக்குழு தீர்மானக்குழுவில் இடம்பெற்றுள்ள ஜெயக்குமார் உட்பட 12 உறுப்பினர்களும் வந்திருந்தனர். அதிமுக செயற்குழு பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக அலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் தனது காரில் புறப்பட்டு சென்றார்.
இதை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார், திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்கு குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
ஒற்றை தலைமை விவகாரம் குறித்து கட்சிதான் முடிவு செய்யும். என்னை பொருத்தவரை ஒற்றை தலைமை என்பது தொண்டர்களின் மனநிலை. ஒற்றை தலைமை குறித்து நான் பேசியது ஒன்றும் சிதம்பர ரகசியம் கிடையாது. கடைக்கோடி தொண்டன் தான் அதிமுகவை வழிநடத்துகிறான். ஒற்றை தலைமை என்பது அவனது விருப்பமாக உள்ளது.
ஒற்றை தலைமை குறித்து நான் கூறியதில் ஒரு தப்பும் இல்லை. எந்த பூச்சாண்டிக்கும் நான் பயப்பட மாட்டேன். பதவி என்பது எனக்கு பெரியது இல்லை. அடிமட்ட தொண்டனாக இருந்தும் அதிமுகவுக்காக பாடுபடுவேன். தலைமை விவகாரத்தில் ஒத்தையா ரெட்டையா என்பதை கட்சித்தான் முடிவு செய்யும்.