வடகிழக்கு மாநிலங்களை வாட்டி வதைக்கும் வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, 18 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை வெள்ள பாதிப்பு காரணமாக சுமார் 18 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உள்ள 28 மாவட்டங்களைச் சேர்ந்த 2,930 கிராமங்கள் இந்த வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் 43 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த கனமழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது. ஹோஜாய், நலபாரி, காம்ரூப், சோனித்பூர், தூப்ரி ஆகிய மாவட்டங்கள் தீவிர பாதிப்பை சந்தித்துள்ளன. அம்மாநிலத்தில் ஓடும் பேக்கி, மனாஸ், பக்லாதியா, பிரம்மபுத்திரா, கோபிளி ஆகிய நதிகள் அபாய கட்டத்தை எட்டியுள்ளன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக களமிறங்கியுள்ள ராணுவம், துணை ராணுவப் படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இதுவரை ஒரு லட்சத்து பேரை மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அம்மாவட்டத்தின் சாலை மற்றும் ரயில் மார்க்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவிடம் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அசாம் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அசாம் மட்டுமல்லாது திரிபுரா, அருணாசலப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேகாலயா மாநிலத்தில் மழை வெள்ளம் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்படும் சிரபுஞ்சி பகுதியில் 80 ஆண்டுகள் காணாத மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், திரிபுரா தலைநகர் அகர்த்தலாவிலும் 60 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பொழிந்துள்ளது. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்சார சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தொடர்புக்கு கூட செல்போன் பயன்டுத்த முடியாமல் அசாம் மக்கள் தவித்து வருகின்றனர். மின்வெட்டு சூழலால், செல்போன் சார்ஜ் செய்வதற்காக சில இடங்களில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில், ஒரு போனுக்கு சார்ஜ் போட ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.