அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக அமைதியாக போராடுங்கள் – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள்
புதுடெல்லி: அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடுங்கள் என்று இளைஞர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கரோனாவுக்கு பிந்தைய உடல்நல பாதிப்புகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல இடங்களில் தற்போது வன்முறை நிகழ்ந்து வரும் வேளையில் இளைஞர்களுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஆயுதப் படைகளுக்கு புதிய ஆட்சேர்ப்பு கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது துரதிருஷ்டவசமானது. இது முற்றிலும் செல்லும் திசையின்றி உள்ளது. இளைஞர்களின் குரலை புறக்கணிப்பதாக உள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் பலர் இத்திட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும். இளைஞர்களின் நலனை காக்கவும் இந்த திட்டத்தை வாபஸ் பெறச் செய்யவும் போராடும் எனஉறுதி அளிக்கிறேன். உண்மையான தேசபக்தர்களாக சத்தியம், அகிம்சை மற்றும் அமைதி வழியில் உங்கள் குரலை நாங்கள் வெளிப்படுத்துவோம்.
உங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான மற்றும் வன்முறையற்ற வழியில் போராட்டம் நடத்துமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். காங்கிஸ் கட்சி உங்களுக்கு துணையாக இருக்கிறது. இவ்வாறு சோனியா காந்தி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.