26 வருடங்களாகச் சிறையில் வாடும் அரசியல் கைதி யாழ். வந்து தாயாருக்கு கண்ணீருடன் இறுதி அஞ்சலி.
26 வருடங்களாகச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் தனது தாயின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள அழைத்துவரப்பட்ட அவர், இன்று தாயின் இறுதிக்கிரியைக்கு அழைத்துவரப்பட்டார்.
பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அவர் தனது தாயாருக்குக் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்திய காட்சி அனைவரின் மனதையும் நெருடலுக்குள்ளாக்கியுள்ளது.
யாழ்ப்பாணம் , திருநெல்வேலியில் வசித்து வந்த குறித்த அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் – வாகீஸ்வரி (கண்ணாடி அம்மா) கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை காலமானார்.
“மண்ணறைக்குப் போவதற்குள் என் பிள்ளைக்கு ஒரு பிடி சோறூட்ட வழிகாட்டையா?” என நல்லூரானிடம் வேண்டிக்கொண்டிருந்த தாய், இதுவரை தன் பிள்ளையின் திருமுகம் காணாமலே விண்ணுலகை ஏகிவிட்டார் என உறவினர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
கடந்த 1996ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு தமிழ் அரசியல் கைதியாக கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் இலங்கை மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவத்தின் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ளார்.
குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகின்றது.