பறவை மோதியதால் நடுவானில் தீப்பிடித்த விமானம் – உள்ளூர்வாசிகள் பார்த்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
பீகார் மாநிலம் பாட்னா தலைநகரில் இருந்து டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான B737-800 போயிங் விமானம் நண்பகல் 12 மணியளவில் புறப்பட்டது. விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் விமானத்தில் பறவை மோதியதில் ஒரு என்ஜினில் தீ பிடித்துள்ளது. விமான குழுவுக்கு இது குறித்து அறிகுறிகள் ஏதும் தெரியாமல் இயல்பாக விமானம் மேலே டேக் ஆப் ஆகி பறந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விமானம் அவசரமாக பாட்னா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் பயணித்த 185 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகு ஸ்பைஸ் ஜெட் விமான பயணிகள் மாற்று விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விமான விபத்து தொடர்பாக பொறியாளர் குழு விசாரித்து வருவதாக விமான நிலைய இயக்குர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து நடைபெற்ற முதல்கட்ட ஆய்வில் பறவை மோதியதில் விமானத்தின் fan பிளேடுகள் மூன்று சேதமடைந்துள்ளன. உரிய நேரத்தில் இந்த விபத்து கண்டறியப்பட்டு விமானக் குழுவுக்கு தகவல் அனுப்பப்ட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.