நாட்டின் இந்தப் பேரவலத்துக்கு ராஜபக்ச குடும்பமே பொறுப்பு! போட்டுத் தாக்குகின்றார் சுமந்திரன்.
“நாட்டை விற்றாவது மக்கள் உயிர் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு இந்த நாட்டை ராஜபக்ச குடும்பம் தள்ளியுள்ளது” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டின் இந்தப் பொருளாதார வீழ்ச்சி இந்த அரசால் உருவாக்கப்பட்ட ஒன்று. பொறுப்பு இல்லாமல் செயற்பட்டதன் காரணமாக – தேர்தல்களை வெல்ல வேண்டும் என்பதற்காகச் சில நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாகத்தான் மெதுமெதுவாக வீழ்ச்சியடைந்து வந்த பொருளாதாரம் திடீரெனப் பாரியளவில் வீழ்ச்சியடைந்தது.
இந்த வீழ்ச்சிக்குக் காரணமானவர்களை அப்புறப்படுத்தினால்தான் நாட்டுக்கு எவரும் உதவி செய்ய முன்வருவார்கள்.
தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்குப் பிரதான புள்ளியாக இருக்கின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து பதவியில் இருக்கின்ற வரைக்கும் சர்வதேசத்தின் உதவிகள் நாட்டுக்குச் சரியான முறையில் கிடைக்காது.
நாட்டில் நிலையான அரசு இல்லாமல், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் சர்வதேசத்தின் எந்த உதவிகளையும் நாம் எதிர்பார்க்க முடியாது.
இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்குப் பெரும் காரணகர்த்தாராக இருக்கின்ற ஜனாதிபதி பதவியிலிருந்து இறங்க வேண்டும் அல்லது அவரது நிறைவேற்று அதிகாரம் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. ஆகையினால்தான் அரசை எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழைப்பு வருகின்றபோது அவர்கள் அதை நிபந்தனையாக முன்வைக்கின்றனர். அந்த நிபந்தனை இல்லாமல் நாட்டிலே மாற்றம் ஒருபோதும் ஏற்படப்போவதில்லை” – என்றார்.