போலீஸ்காரர் போல் நடித்து பல லட்சம் நூதன மோசடி: வாலிபர் சிக்கினார்
புழல், காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் பிச்சுமணி. முன்னாள் காவல்துறை அதிகாரி. இவரது மகன் மதன்குமார்(32), தன்னை காவல்துறை அதிகாரியாக அறிமுகப்படுத்திக்கொண்டு, வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்து, தன்னை தொடர்பு கொண்டவர்களின் வீடுகளுக்கு சைரன் ஒலியுடன் காரில் மதன்குமார் சென்று அவர்களை நம்ப வைத்திருக்கிறார். இந்நிலையில், வீடு கட்டி தருவதாக கூறி, ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த சங்கரிடம் ரூ.10 லட்சம், மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பல்லாவரத்தை சேர்ந்த வெற்றிசெல்வனிடம் ரூ.7 லட்சம் பெற்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், புழல் பகுதிகளில் ஏராளமானவர்களிடம், குறைந்த விலையில் அதிநவீன வசதிகளுடன் வீடு கட்டி தருவதாக வாக்குறுதி அளித்து பல லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு, அவர் ஏமாற்றி வந்துள்ளார்.ஆனால், கூறியபடி, தன்னிடம் பணம் கொடுத்த யாருக்கும் வீடுகட்டி தரவில்லை. இதனால், அவரிடம் பணத்தை கொடுத்தவர்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து, அவரிடம் பணத்தை தருமாறு கேட்டனர். ஆனால், மதன்குமார் பணத்தை திருப்பி தராமல், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து, பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், புழல் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதன்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் தன்னை ஒரு காவல்துறை உயர் அதிகாரி எனக்கூறி, ஒரு அடையாள அட்டையை காண்பித்து போலீசாரையும் மிரட்டினார். அந்த அடையாள அட்டையை சோதித்து பார்த்தபோது, அது போலி எனத் தெரியவந்தது.இதையடுத்து, அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், அவர் பலரிடம் பல லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்தனர்.
பின்னர், அவரை நேற்று மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கனவே, பண மோசடி வழக்கில் கைது செய்யபட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.