அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு : ஓபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை எனவும், உட்கட்சி தேர்தலுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அடையாள அட்டையை புதுப்பிக்கவில்லை எனவும் கூறி, அதுதொடர்பாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் நியமனத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஆதரவான உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மட்டும் பங்கேற்க அழைப்பு விடுக்கபட்டுள்ளதால், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரியும், அதிமுக உட்கட்சி தேர்தல் அலுவலர்களான பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் உட்கட்சி தேர்தல் நடத்தக் கோரியும், நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்… அதுவரை அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்த மனு சென்னை அல்லி குளம் 23வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் முன் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுக் குழுவிற்கு இடைக்கால தடை வேண்டும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பாலகிருஷ்ணன் வாதிட்டார்.
இதையடுத்து பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுவிற்கு நாளை மறுதினம் பதில் அளிக்க அதிமுக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைப்பு செயலாளர் பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணை தள்ளிவைத்தார்.