அதிமுக பொதுச் செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? – தனித் தீர்மானம் இன்று இறுதி செய்ய வாய்ப்பு
அதிமுக பொதுக்குழுவுக்கான தீர்மான தயாரிப்புக் குழுவின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தனித் தீர்மானம் இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை மறுதினம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஒற்றைத்தலைமை கோரிக்கை எழுந்ததால் பரபரப்பு நிலவிவருகிறது.
இந்நிலையில், பொதுக்குழுவுக்கான தீர்மானத்தை இறுதிசெய்யும் குழுவின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தனித் தீர்மானம் இறுதிசெய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இன்றைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கை முன் கூட்டி விசாரிக்க வேண்டும் என்று, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால் கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், சூரியமூர்த்தி அதிமுகவை சேர்ந்தவரே இல்லை எனவும், அவரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது. இதையடுத்து, அனைத்து மனுதாரர்களும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தது.
பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என ஓ.பி.எஸ் வலியுறுத்தும் நிலையில், திட்டமிட்டபடி, வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும், அதில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நிச்சயம் பங்கேற்பார் என்றும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவு முகாம் நேரில் ஆய்வு செய்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முனுசாமி, ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியது தெரியாது என கூறினார்.