தாம்பரத்தில் 24-ம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு

தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தனியார் பள்ளிகள் சாா்பில் இயக்கப்படும் பேருந்துகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் பொருட்டு, தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள், வரும் 24-ம் தேதி காலை 8 மணி முதல் ஆய்வு செய்யப்பட உள்ளன.
வண்டலூர் பூங்கா அருகில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் இந்த ஆய்வில் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர், தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், காவல்துறை உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்று தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.
எனவே அனைத்து பள்ளி வாகனங்களையும் நடப்பில் உள்ள ஆர்சி புத்தகம், வாகன காப்பீடு, பெர்மிட், மாசு கட்டுப்பாட்டு ஆவணங்களுடன் நேரில் ஆய்வுக்கு எடுத்து வர வேண்டும் என்று அனைத்து தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.