Honeytrapஇல் சிக்கி பாகிஸ்தான் உளவாளிக்கு ஏவுகணை ரகசியத்தை கசியவிட்ட பொறியாளர் கைது
டிஆர்டிஓ(DRDO) எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் அங்கமான டிஆர்டிஎல் (DRDL – Defense Research & Development Laboratory) அமைப்பில் பணியாற்றும் பொறியாளர் ஒருவர் ஹனிட்ராப் எனப்படும் பாலியல் வலையில் சிக்கி இந்திய ஏவுகணை திட்டத்தின் தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு கசியவிட்ட அதிர்ச்சிக்குரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவரின் பெயர் மல்லிகார்ஜுனா ரெட்டி எனவும் இவரை உளவுத்துறை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஎல் அமைப்பில் மேம்படுத்தப்பட்ட நாவாய் படை திட்டத்தில் மல்லிகார்ஜுனா ரெட்டி பணிபுரிந்துள்ளார். இவரை பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளி பேஸ்புக் மூலமாக பழகி தன் வலையில் வீழ்த்தியுள்ளார். சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் உளவாளி நதாஷா ராவ் என தனது பெயரை போலியாக வைத்துக்கொண்டு, தான் பிரிட்டனில் பாதுகாப்பு சார்ந்த நாளிதழில் பணியாற்றுவதாக இவரிடம் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். மல்லிகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு காலம் முழுவதும் வாழப் போவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
மல்லிகார்ஜுனா பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி பகுதியில் வேலை செய்து வரும் நிலையில், அணு ஆயுத திறன் கொண்ட கடற்படையில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் விவரங்களை நதாஷாவிடம் கசியவிட்டுள்ளார். 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2021ஆம் ஆண்டு டிசம்பர் வரை மல்லிகார்ஜுனா இந்த பாகிஸ்தான் உளவாளி பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த பெண் சிம்ரன் சோப்ரா மற்றும் ஒமிஷா அதிதி என்ற இரு பெயர்களில் மேலும் பேஸ்புக் கணக்குகளை வைத்துள்ளார். இந்த பெண்ணிடம் வீடியோ கால் மூலம் பேச மல்லிகார்ஜுனா முயற்சி செய்தும் அவர் அதை ஏற்கவில்லை. மேலும், அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை மல்லிகார்ஜுனா கேட்டதற்கும் உளவாளி பெண் மறுப்பே தெரிவித்துள்ளார்.
கைதான மல்லிகார்ஜுனா ரெட்டியிடம் இருந்து இரு செல்போன்கள், ஒரு லேப்டாப் மற்றும் சில ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், மல்லிகார்ஜுனா வங்கிக் கணக்கு பரிவர்த்தனையை சோதனை செய்யும் காவல்துறை அதன் மூலம் ஆதாரங்களை திரட்ட முயற்சி செய்து வருகிறது.