ரணிலின் எதிர்ப்பை மீறி நந்தலாலுக்கு நியமனம் !அலி சப்ரி மீண்டும் நிதி அமைச்சர் !
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் நியமனத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்த்த போதிலும் , அதனை கருத்தில் எடுத்துக் கொள்ளாது கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் நியமனத்தை உறுதிப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கி ஆளுநரின் நியமனத்தை உறுதிப்படுத்தும் கடிதத்தில் பிரதமர் கையொப்பமிட்டிருக்க வேண்டும் எனவும், ஆனால் இதுவரை அவர் அதில் கையொப்பமிடப்படவில்லை எனவும் தெரியவருகிறது.
அதன்படி நேற்று இடம்பெற்ற மொட்டு குழு கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுனர் நியமனம் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, மத்திய வங்கி ஆளுநரின் சேவையை தொடர்ந்தும் கோருவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
புதிய நிதியமைச்சரை நியமிக்கவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. பிரதமர் ரணில் வசமுள்ள நிதியமைச்சர் பதவியை அலி சப்ரியிடம் மீண்டும் கொடுக்க ஜனாதிபதியின் திட்டமிட்டுள்ளார்.
நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையிலான முரண்பாடும், நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க தனது செயல்பாடுகளில் தோல்வியடைந்தமையும் இதற்குக் காரணமாகும்.
மறுபுறம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தவர்கள் தொடர்ந்தும் பேசி சாதகமான முடிவை எட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் கருத்தாகும்.
அப்போதைய நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் சிறிவர்தன ஆகியோரினால் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கமைவாக, ஜனாதிபதி இதனை மீண்டும் ஒருமுறை திரு அலி சப்ரிக்கு அறிவித்ததையடுத்து, மீண்டும் நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்க அலி சப்ரி இணக்கம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைவசமுள்ள நிதியமைச்சுக்கு பதிலாக, கொள்கை திட்டமிடல் போன்ற ஒரு விடயத்தை ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.