குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கடந்து வந்த அரசியல் பாதை
நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், இந்த தேர்தலில் மத்திய பாஜக கூட்டணி அரசு தன்னுடைய பலத்தால் எளிதாக தனது வேட்பாளரை வெற்றி பெற வைத்துவிடும் என்பதே பெரும்பாலானோரின் கணிப்பாக இருக்கிறது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு சவால் அளிக்கும் விதமாகவும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வெள்ளோட்டமாகவும் பொது வேட்பாளர் என்ற அஸ்திரத்தை எடுத்துள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முன்னெடுப்பின் பேரில் யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். காங்கிரஸ் கட்சியும் இதற்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது.பொது வேட்பாளர் தேர்வில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெயரை மம்தா முதலில் பரிந்துரைத்தார். இதற்கு சரத் பவார் மறுப்பு தெரிவித்துவிட்டார். அதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபல கிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் முன்வந்த நிலையில், இந்த இருவருமே வாய்ப்பை ஏற்கவில்லை.
இந்நிலையில், மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பதவியை ராஜினாமா செய்த யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகளின் விருப்பத்தை ஏற்று தேர்தலில் வேட்பாளராக களம் இறங்குகிறார்.
யஷ்வந்த் சின்ஹா கடந்து வந்த பாதை
1937ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பிகார் மாநிலத்தில் பிறந்த யஷ்வந்த் சின்ஹா, பாட்னா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இரண்டு ஆண்டு பணி புரிந்த யஷ்வந்த் சின்ஹா, 1960 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.பீகார் அரசின் நிதித்துறை, மத்திய வர்த்தகத் துறை, வெளியுறவுத்துறை என பல்வேறு அரசு துறைகளில் இவர் பணியாற்றியுள்ளார். 1984ஆம் ஆண்டுதான் யஷ்வந்த் சின்ஹாவின் பொது வாழ்வில் திருப்புமுனை ஆண்டு. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சேசலிச இயக்கத்தில் ஈடுபாடு இருந்தாலும், பொருளாதார நிலை காரணமாக இவர் அரசியலில் இறங்க தயக்கம் காட்டி வந்தார்.
ஆனால், தயக்கத்தை தூக்கி எறிந்து 1984ஆம் ஆண்டில் ஜனதா கட்சியில் இணைந்தார். கட்சியின் தேசிய பொது செயலாளராக 1986ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். 1988ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரான யஷ்வந்த் சின்ஹா, 1990-91ஆம் ஆண்டு சந்திரசேகர் அரசின் மத்திய நிதி அமைச்சராக குறுகிய காலம் பதவி வகித்தார். பின்னர், பாஜகவில் இணைந்து 1996ஆம் ஆண்டில் கட்சியின் செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பு வகித்தார். மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சரானார். பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர் கட்சி தலைமையிடம் இவருக்கு விரிசல் போக்கு உருவானது.
இதையடுத்து 2018ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் மோடியின் அரசின் திட்டம் மற்றும் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். 2021ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவருக்கு துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதேவேளை,இவரது மகன் ஜெயந்த் சின்ஹா பாஜகவிலேயே தொடர்ந்து பயணிக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மக்களவை உறுப்பினராக ஜெயந்த் சின்ஹா தற்போது உள்ளார்.