இலங்கையை உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் பிச்சைக்கார நாடாக்கி விட்டார் ராஜபக்ச!
“ஒன்று, இந்தியா எதையாவது தர வேண்டும். இல்லாவிட்டால் உலகம் தரவேண்டும் என்று நம் நாட்டை நாளாந்தம் உலக நாடுகளிடம் கையேந்தும் பிச்சைக்கார நாடாக்கி விட்டார், ராஜபக்ச,” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, பொது எதிரணியாக சபையில் ஒருவார சபை பகிஸ்கரிப்பு முடிவை அறிவித்து சபையில் இருந்து வெளியேறும் முன் அரசாங்கத்தை விமர்சித்தார்.
“பல்லாண்டுகளுக்கு முன் ஜே. ஆர். ஜெயவர்தன சான்-பிரான்சிஸ்கோ நகரில் நிகழ்ந்த உலக மகாநாட்டில் ஜப்பானுக்கு ஆதரவாக ஆற்றிய உரையின் காரணமாக, ஜப்பான் வரலாறு முழுக்க எமக்கு மிக அதிக உதவிகளை வழங்கும் நன்றியுள்ள நாடாக இருந்தது. இந்த பாராளுமன்றம், ஜப்பான் தந்ததாகும். பக்கத்தில் இருக்கும் ஸ்ரீ ஜெயவர்ந்தபுர மருத்துவமனை ஜப்பான் தந்ததாகும். ரூபவாஹினி ஜப்பான் தந்ததாகும். கண்டி பேராதெனிய மருத்துவமனை ஜப்பான் தந்ததாகும். இதற்கு பிறகு இலகு ரயில் திட்டத்துக்காக, எமது நாட்டுக்கு 1.4 பில்லியன் டொலர்களை தரவிருந்த ஜப்பான் நாட்டை, நன்றிகெட்ட முறையில் நிராகரித்து, அந்நாட்டின் மனதை உடைத்தமை ராஜபக்சவின் டிப்ளமடிக் க்ரைம்.” என்றும் மனோ கணேசன் கூறினார்.
“தன்னை ஜனாதிபதி கோதாபயவே அழைத்து பிரதமராக நியமித்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். ரணிலை நியமித்த ஜனாதிபதி கோதாபய, பிரதமர் ரணில் இல்லாமல் தனியாக அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துகிறார். பிரதமர் ரணிலும் தனியாக அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துகிறார். இதனால்தான் இதை ஒரு அலங்கோல அரசாங்கம் என்கிறேன்.” என்றும் மனோ கணேசன் மேலும் கூறினார்
“கொழும்பில் மத்தியதர மற்றும் பின்தங்கிய மக்கள் படும்பாடு சொல்லும்தரமன்று. எரிவாயு, மண்ணெண்ணெய், பெட்ரோல், மருந்து, உணவு பிரச்சினைகளால், மக்கள் சாவை நோக்கி நகர்கிறார்கள். தொடர்மாடிகளில் வாழும் மக்கள் படும்பாடு அகோரம். இவர்களுக்கு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒருவேளையாவது, சமைத்த உணவு கொடுக்க சொன்னேன். இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.” என மனோ கணேசன் மேலும் கூறினார்.
“மலைநாட்டில் தோட்டங்களில் தொழிலாளருக்கு, டொலர் பெறுமதி கூடியதற்கு இணங்க நாட்சம்பளத்தையும் கூட்ட சொன்னேன். முடியவில்லை என்றால், தோட்டங்களில் இருக்கும் பயிரிப்படாத தரிசு காணிகளில், உணவு பொருட்களை பயிரிட்டு வாழ அனுமதி, வழங்கும்படி சொன்னேன். இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.” என மனோ கணேசன் மென்மேலும் கூறினார்
“மக்கள் பிரச்சினைகளை தீர்க்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி நண்பர் நிமல் லான்சா எம்பி கூறுகிறார். நாம் எதிர்கட்சியாக இருந்தாலும், பிரதமர் கூட்டும் கூட்டங்களுக்கு போய் ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்பதை அவருக்கு ஞாபகப்படுத்துகிறேன். எனக்கு அமைச்சு பதவிகளில் இப்போது ஆர்வமில்லை. நாம் இருக்கும் இடத்தில் இருந்தவாறே, எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எவருடனும் ஒத்துழைக்க தயார். ஆனால், எமது கோரிக்கைகள், ஆலோசனைகள் தொடர்பில் எதுவும் இதுவரை உருப்படியாக நடக்க வில்லையே. ஆகவே, பிரதமர் கூட்டும் கூட்டங்களுக்கு போய் வருவதில் பிரயோஜனம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அவசியமானால், எமது கட்சி பிரதிநிதிகளை நாம் அனுப்புவோம்.” என மனோ கணேசன் மேலும் கூறினார்.