ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை சம்பவத்தில் எதிர்பாராத அதிரடி திருப்பம்! மர்மம் விலகியது

இந்தியாவை அதிரவைத்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத் வன்மோர் மற்றும் மானிக் வன்மோர். இவர்கள் தங்கள் தாயார், மனைவி, நான்கு குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகின்றனர்.
இதில் போபத் வன்மோர் ஆசிரியராகவும், மானிக் வன்மோர் கால்நடை மருத்துவராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும் நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டனர். விஷம் கொண்ட ஏதோ பொருளை உட்கொண்டு அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 9 பேர் தற்கொலை என்ன காரணம் என விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த குடும்பத்தினர் பலரிடம் கடன் வாங்கியிருந்த நிலையில் அதன் காரணமாக இறந்தார்களா அல்லது டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மீண்டும் உயிர்பெறலாம் என்ற மூடநம்பிக்கையில் இறந்தது போன்ற காரணத்தால் தற்கொலை செய்தார்களா என விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 13 பேரை கைது செய்துள்ளனர். அதன்படி போபத் வன்மோர் மற்றும் மானிக் வன்மோர் ஆகியோர் பலரிடம் அதிகளவில் கடன்களை வாங்கியுள்ளனர்.
ஆனால் அதை திரும்பி தர முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் போபத் மற்றும் மானிக் குடும்பத்தாரை துன்புறுத்தி அவமானப்படுத்தி வந்தனர். இதை தொடர்ந்தே குடும்பத்துடன் தற்கொலை செய்யும் முடிவுக்கு அவர்கள் தள்ளப்பட்டனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொலிசார் கூறுகையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இதுவரை கடன்தான் முதன்மையான காரணமாக உள்ளது. ஆனால் இந்த வழக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.