ஓடி ஒழிந்த ஜோன்ஸ்டனுக்கு பிணை : சரணடைந்தவர்களுக்கு தடுப்பு காவல் (Video Update)
இன்று (22) பொலிஸாரிடம் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்ட லஹிரு வீரசேகர, ரத்தா என அழைக்கப்படும் ரத்திந்து சேனாரத்ன உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கம பிரதேசங்களில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்ட பேரணியின் போது மருதானை பொலிஸில் சரணடைந்ததை அடுத்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த 7பேரது விபரங்கள் :
ரதிது சேனாரத்ன (ரட்டா)
தம்மிக்க முனசிங்க
லஹிரு வீரசேகர (முன்னாள் அழைப்பாளர் – பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பு)
ரத்கரவ்வே ஜினரதன தேரர்,
ஜகத் மனுவர்ணா (நடிகர்)
எரங்க குணசேகர (அமைப்பாளர் – சோசலிச இளைஞர் ஒன்றியம்)
ஜெகன் அப்புஹாமி (நடிகர்)
இதேவேளை, கோட்டகோ கம மற்றும் மைனா கோ கம மோதல் சம்பவத்தில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிக்கையளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
உத்தரவாததாரர்கள் தங்களுடைய இருப்பிடம் மற்றும் சொத்துக்கள் குறித்த சான்றிதழ்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி இரண்டு தீர்மானங்களுக்கும் கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.