இலங்கை வந்த இந்தியத் தூதுக் குழு கோட்டாபய, ரணிலுடன் முக்கிய பேச்சு.
இலங்கையை இன்று வந்தடைந்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான விசேட தூதுக் குழுவினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
கொழும்பு – கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா, இந்திய பிரதான பொருளாதார ஆலோசகர் வீ. ஆனந்த் நாகேஸ்வரன் மற்றும் இந்திய பொருளாதார அலுவல்கள் திணைக்களத்தின் செயலாளர் உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர், இந்திய விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தினூடாக இன்று முற்பகல் 9.20 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அவர்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் குறுகிய கால மற்றும் நீண்ட கால உதவித் தேவைகள் குறித்து தூதுக்குழுவினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடனான பேச்சின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர், அவருடனும் இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் கலந்துரையாடினர்.
மேற்படி இரு சந்திப்புக்களிலும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லேவும் கலந்துகொண்டார்.
இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக இலங்கை கோரியுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நேரில் ஆராய இந்திய விசேட தூதுக்குழுவினர் கொழும்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.