யாழ். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்கப்பட்ட இளைஞர் பரிதாப மரணம்.

யாழ்ப்பாணம் மாநகர் மகாத்மா காந்தி (மணிக்கூட்டு) வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவ சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிலரே இளைஞர் மீது தாக்குதல் நடத்தினர் என்று அவரது ஊரவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

உடுவில் – செப்பாலை கோயிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம் பிரசாந் (வயது 23) என்பவரே உயிரிழந்தார்.

ஊடகப் பயிலுநர் நண்பருடன் எரிபொருள் நிரப்ப இளைஞர் சென்றுள்ளார். அப்போது இடையில் புகுந்து வந்தவர்கள் எரிபொருள் நிரப்ப முற்பட்டபோது ஊடக நண்பர் காணொளி பதிவு செய்துள்ளார். காணொளிப் பதிவைத் தடுக்க எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் ஊடகப் பயிலுநரின் கையை முறிக்கியுள்ளார்.

அதன்போது நியாயம் கேட்க முற்பட்ட இளைஞரை எரிபொருள் நிலையத்தில் உள்ள மூவர் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர். அதனால் இளைஞருக்கு வாய், மூக்கு வழியாக குருதி ஓடியுள்ளது.

அங்கிருந்து வீடு சென்ற இளைஞர் மறுநாள் மதியம் நெஞ்சுவலி மற்றும் உடல் சோர்வடைய யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

எனினும், இரண்டு நாள்களின் பின் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இறப்பு விசாரணை இடம்பெற்றது.

இளைஞரின் சடலத்தின் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.