பஸ்களைத் தள்ளிக்கொண்டு வந்து பருத்தித்துறை நகரில் ஆர்ப்பாட்டம்.
யாழ்., பருத்தித்துறை சாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ளச் சந்தை வியாபாரிகளுக்கு டீசல் வழங்கப்படுகின்றது எனக் குற்றஞ்சாட்டியும், தமக்கு உரிய ஒழுங்கில் வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்தும் தனியார் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துநர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை தமது பஸ்களைப் பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு முன்பாகத் தள்ளிக்கொண்டு வந்து அவர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், எமக்கு உரிய ஒழுங்குமுறைகளில் பருத்தித்துறை சாலை (டிப்போ) முகாமையாளர் டீசலை விநியோகிக்கவில்லை. இரவு நேரங்களில் கள்ளச் சந்தை வியாபாரிகளுக்குப் பெருமளவான டீசல் வழங்கப்படுகின்றது. பயணிகள் சேவையில் ஈடுபடும் எமக்கு டீசல் வழங்க இழுத்தடிப்புகள் செய்து உரிய ஒழுங்கில் டீசல் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை” – என்று போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
அதேவேளை, கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர், யாழ்., கோண்டாவில் சாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தமக்கு டீசல்கள் வழங்கப்படுவதில்லை எனத் தனியார் பஸ் சாரதிகள் போராட்டம் நடத்தியிருந்தனர். அவர்களுடன் யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் பேச்சுக்களை நடத்தி உரிய ஒழுங்கில் டீசல் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்து இருந்த நிலையில், பருத்தித்துறை சாலைக்கு (டிப்போ) எதிராக இன்று போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.