அவகாசம் கேட்கும் தமிழக அரசு.. கோடநாடு வழக்கு ஒத்திவைப்பு
அரசு தரப்பு கால அவகாசம் கேட்டதை அடுத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜூலை 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கொடநாட்டில் உள்ள அவருடைய பங்களாவில், கொள்ளை நடந்தது. காவலாளி ஒருவரும் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் நிபந்தனை ஜாமீனில் உள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், வளையார் மனோஜ், உதயகுமார், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீஷன், ஜித்தின் ஜாய் உட்பட பேர் 9 பேர் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் ஆஜாரகினர்.
உடல் நலக்குறைவால் திபு, ஆஜராகவில்லை. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தமிழகத்தை தொடர்ந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் வழக்கு விசாரணை விரிவுபடுத்தப்பட்டு நடத்தப்பட்டு வருவதால் வழக்கு விசாரணை நடத்த மேலும் கூடுதல் கால அவகாசம் தேவை என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.
கொடநாடு எஸ்டேட் கொலை கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான் மற்றும் அவரது மனைவி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து மேல் பலன் விசாரணை நடத்த இருப்பதாலும், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் சேலத்தை சேர்ந்த கனகராஜ் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஸ்ரீதரன் விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.