அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த தீர்மானங்கள் என்னென்ன?
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த 23ம் தேதி வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு- பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல், கழக அமைப்பு தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்து, அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு செயல்பட்டு வரும் நிர்வாகிகளுக்கு ஒப்புதலும், அங்கீகாரமும் வழங்கும் தீர்மானம் முதலாவதாக இடம் பெற்றிருந்தது.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்தது, விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க தவறியது, அதிமுகவினர் மீது பொய் வழக்குகளை போடுவது, திராவிட மாடல் என்ற போர்வையில் கபட நாடகம் ஆடுவது என திமுகவை கண்டித்து தனித்தனி தீர்மானங்கள் இடம் பெற்றிருந்தன.
புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவும், கச்சத்தீவை மீட்டெடுக்கவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும் மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தும் தீர்மானம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் என்ற போர்வையில் குடும்ப முதலீட்டை செய்த திமுக அரசின் ஊழலை தோலுரித்து காட்டுவோம்; சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் என்ற தீர்மானம் இடம்பெற்றிருந்தன
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம்,பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவிக்கும் தீர்மானமும் இடம்பெற்றிருந்தது.