தமிழக முகாமில் 30 இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி; ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு

தமிழக மாவட்டம் திருச்சியில் உள்ள முகாமில் நேற்று 30 இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில், பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 150 வெளிநாட்டினர் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், விசா காலம் முடிந்தும், அனுமதியின்றி இந்தியாவில் நுழைந்த மற்றும் வெளிநாட்டுககு தப்ப முயன்றவர்களும் உள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்படாமல் இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறும் இவர்கள், தங்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த மே மாதம், 20-ஆம் திகதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்துவரும் இந்த போராட்டத்தில், தங்களது கோரிக்கைகளை அரசுக்கு உணர்த்தும் விதமாக, உண்ணாவிரதப் போராட்டம், தீப்பந்தம் ஏந்தி போராட்டம், பாடைகட்டி போராட்டம் என பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.
ஆனால், இந்த போராட்டங்களுக்கு தமிழக அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை என விரக்தியடைந்த நிரூபன், நிஷாந்தன், ராஜன், கயன் ஆகிய 4 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) மரத்தின் மீது ஏறி குதிக்க போவதாக தற்கொலைப் போராட்டம் நடத்தினர்.
மேலும், 30 பேர் தூக்க மாத்திரைகளை அருந்தி தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தினர்.
உமா ரமணன் (44) என்பவர் தன்மீது மண்எண்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடல் கருகிய நிலையில் அவரை மீட்ட முகாம்வாசிகள், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உமா ரமணன் சிசிச்சை பெற்று வருகிறார்.
விடுதலை வேண்டி, இலங்கை தமிழர்கள் பலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.