எரிபொருள் நிலையத்தில் பொலிஸார் மீது தாக்குதல் – கந்தளாயில் பதற்றம்.
திருகோணமலை, கந்தளாயில் இன்று எரிபொருள் பெற்றுக்கொள்ளச் சென்ற இளைஞர்கள் சிலர் மது போதையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு, பொலிஸார் ஒருவரையும் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கந்தளாய் 91ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் பெரும் திரளான பொதுமக்கள் எரிபொருளுக்காகக் காத்துக்கொண்டிருந்த வேளையில் சில இளைஞர்கள் அத்துமீறி ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளைக் கொண்டு எரிபொருள் பெறுவதற்கு முயன்றனர். இதன்போது பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அவர்களை இனங்கண்டு தடுத்து நிறுத்த முற்பட்டபோது, பொலிஸாரின் கடமைக்கு அவர்கள் இடையூறுகள் ஏற்படுத்தியதோடு, பொலிஸார் ஒருவரையும் தாக்கினர்.
இதனால் அங்கு சில மணி நேரம் அமைதியின்மையும் பதற்றமும் ஏற்பட்டது. மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டபோது மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டோர் தப்பிச் சென்றனர். பின்பு எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெற்றது.