நாட்டுக்காகப் போராடியவர்கள் சிறைச்சாலைக்குள்; வன்முறையைத் தூண்டியவர்கள் வெளியே!
“காட்டுமிராண்டித்தனத்தையும் வன்முறையையும் உருவாக்கிய ராஜபக்சக்களும் கும்பலும் இப்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர். இந்நாட்டு மக்களுக்காக ச் சிறந்த எதிர்காலத்தை வேண்டி போராடிய மக்கள் இன்று சிறையில் அடைக்கப்பட்ட வண்ணமுள்ளனர்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டக்காரர்களை – சிறைச்சாலைக்கு நேற்று நேரில் சென்று சந்தித்து, சுகநலம் விசாரித்த எதிர்க்கட்சித் தலைவர், அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“போராட்டத்தின் நோக்கங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன அந்த நோக்கங்களுடன் மாற்றமின்றி பயணிக்கின்றன.
காட்டுமிராண்டித்தனமான ராஜபக்ச வாதம் மற்றும் அரச பயங்கரவாதம் என்ற இரண்டையும் நிராகரிக்கின்றோம்.
வன்முறையைத் தூண்டிய ராஜபக்சக்கள் வெளியே. ஆனால், நாட்டுக்காகப் போராடியவர்கள் உள்ளே. இந்த அணுகுமுறையை அனுமதிக்க முடியாது.
இந்தக் கையாலாக அரசு ஜனநாயக வழியில் விரட்டியடிக்கப்படும். அதற்கான அரசியல் தலைமையத்துவம் எம்மால் வழங்கப்படும். அரசைத் தெரிவு செய்வதற்கான உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்” – என்றார்.