600க்கு 592 மதிப்பெண் வாங்கிய ஆட்டோ ஓட்டுநரின் மகன் – சக பயணியின் செயலால் குவியும் பாராட்டு
தனது குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைத்து அவர்கள் வாழ்வில் நல்ல நிலை அடைந்து உயர வேண்டும் என்பதே அனைத்து பெற்றோருக்கும் உள்ள கனவாகும். ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு இன்றி அனைத்து சமூக அடுக்கிலும் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு பிரதான முக்கியத்துவம் தருவார்கள்.
அவ்வாறு தனது பிள்ளையின் படிப்பு மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆட்டோ ஒட்டுநர், தனது மகனின் பொதுத்தேர்வு மதிப்பெண்ணை சக பயணியிடம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அந்த பயணி தந்தையான ஆட்டோ ஓட்டுநரின் மகிழ்ச்சியை லிங்க்டு இன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தந்தையை பெருமைபடுத்தியுள்ளார். இந்த போஸ்ட் சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியைச் சேர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 592 மதிப்பெண் எடுத்துள்ளார். தனது மகன் இத்தகைய அபார மதிப்பெண்ணை பெற்ற பூரிப்பில் அதை தனது ஆட்டோவில் சவாரிக்கு வந்த விவேக் அரோரா என்பவரிடம் தனது செல்போனில் தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலுடன் காட்டியுள்ளார்.
தந்தையின் மகிழ்ச்சியில் தானும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் விவேக் அரோரா அதை புகைப்படம் எடுத்து, தனது லிங்க்டு இன் பக்கத்தில், மகாராஷ்டிராவில் அகோலா என்ற பகுதியில் நான் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்த போது, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மிகுந்த மகிழ்ச்சியில் தனது மகனின் மதிப்பெண்ணை என்னிடம் பகிர்ந்தார். இந்த மதிப்பெண்ணை பாருங்கள். மிகவும் அபாரமான மதிப்பெண்களை எடுத்துள்ளார் அந்த பையன். தனது மகனின் சாதனையால் தந்தை மிகவும் பெருமையாக உணர்கிறார் என்றுள்ளார்.
இந்த பதிவுக்கு 47,000 க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் கமெண்டில் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த மாணவனின் உயர் கல்விக்கு உதவி தேவை என்றால் அதை செய்யவும் தயார் என பலர் தெரிவித்துள்ளனர்.