பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்க அமைச்சு நடவடிக்கை.

பாடசாலைகளின் அனைத்துத் தரங்களுக்கும் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் நிலை காரணமாக, விடுமுறை வழங்கப்பட்ட அரச பாடசாலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, பாடசாலைகளில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கும் அதிகமாக இருந்தாலும் கூட, சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி, மாணவர் இடைவெளி மற்றும் சமூக இடைவெளியைப் பேண முடிதல், போதுமான வகுப்பறைகள், போதியளவான ஆசிரியர்கள் காணப்படுமாயின், அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்கும் நோக்கில் அனைத்துத் தரங்களுக்கும் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள், மாகாண செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரிவெனா தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சு தெரிவித்துள்ளது.