இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய ஊழியர்கள் புறக்கணிப்புப் போராட்டம்.
பணிக்குக் சென்று திரும்புவதற்குத் தமக்குப் பெற்றோல் வழங்கக் கோரி இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய ஊழியர்கள் அறிவித்திருந்த பணிப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று தொடர்கின்றது.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய ஊழியர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாண ஆளுநரும் யாழ். மாவட்ட அரச அதிபரும் வாக்குறுதி வழங்கிய நிலையில் போராட்டம் கைவிடப்படுகின்றது என சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. அந்தச் செய்திகளில் உண்மையில்லை.
நாங்கள் தொடர்ந்தும் எமது போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். தூர தேசங்களிலிருந்து வருபவர்கள் குறித்த நேரத்துக்குள் அலுவலகத்தைச் சென்று சேர முடியாமையால் எங்கள் வரவு கூட விடுப்பாகவே கருதப்படுகின்றது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் புறக்கணிப்பு மேற்கொண்டால் உடனடியாகவே அதிகாரிகள் தலையிட்டு அவர்களுக்குத் தீர்வு வழங்குகின்றார்கள்.
ஆனால், கொரோனாக் காலத்திலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கரிசனை கொள்வதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமக்குக் பெற்றோல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” – என்றார்.