எரிசக்தி அமைச்சர் கட்டார் புறப்பட உள்ளார் : இரு அமைச்சர்கள் ரஷ்யா விஜயம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (27) கட்டார் செல்லவுள்ளார்.
குவைத் நாடும் இலங்கைக்கு சாதகமாக பதிலளித்துள்ளதுடன் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரியவருகிறது.
மேலும், இரண்டு அமைச்சர்கள் ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதே சமயம் இலங்கையில் தற்போது ஒரு நாளுக்கு போதுமான எரிபொருள் இருப்பு கூட இல்லை என CPC உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது 1100 டன் பெட்ரோல் மற்றும் 7500 டன் டீசல் மட்டுமே உள்ளது.
இலங்கை கடனை செலுத்த தவறியதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள் இலங்கையை மோசமாக ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இலங்கைக்கு எரிபொருளை வழங்க சர்வதேச வங்கியிடம் உத்தரவாதம் கோருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக நாட்டிற்கு எரிபொருள் தாங்கி எதுவும் வரவில்லை எனவும், விரைவில் எரிபொருள் தாங்கி வரவில்லையென்றால், பொது போக்குவரத்து கூட தடைப்பட்டு நாடு முற்றாக செயலிழந்துவிடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சிறிய அளவிலான எரிபொருட்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான டோக்கன் முறை பயனற்றதாக இருக்கும் என்றும் மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான இருப்புகளை வழங்க முடியாததால் மின்வெட்டு மேலும் நீடிக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையிலேயே அமைச்சர்கள் உதவி கேட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் முடிவை எடுத்துள்ளனர்.