தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான பெருந்திருவிழா: அடியவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ்(கோவிட்-19) நோய்த் தொற்று நிலைமையைக் கருத்திற் கொண்டு நாடு முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் திணைக்களத்தினரும், அதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டு தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான மஹோற்சவப் பெருந் திருவிழா காலப் பகுதியிலும் பல்வேறு சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கோவிட்-19 நிலைமையைக் கருத்திற் கொண்டு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி எஸ். சிவதாசனால் ஆலய நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆலயத்தின் நுழைவாயிலில் ஆளடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுச் சகல அடியவர்களும் கருவிகள் ஊடாகப் பரிசோதிக்கப்பட்டு ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்கள் அனைவரும் முகக் கவசங்கள் அணிந்து வருகை தர வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்படல் வேண்டும். கைத் தொற்று நீக்கல் செய்யப்பட வேண்டும்.
ஆலயத்தில் வீண் நேரத்தைச் செலவு செய்யாது குறுகிய காலப் பகுதிக்குள் வழிபாட்டை நிறைவு செய்து அடியவர்கள் செல்ல வேண்டும். வழிபாட்டின் போது ஆலய உட்பகுதியில் அடியவர்கள் நிரம்பியவுடன் வெளியேயிருந்து ஆலயத்திற்குள் செல்லும் அடியவர்கள் சற்றுத் தாமதித்து உள்ளேயிருக்கும் அடியவர்கள் வெளியே சென்ற பின்னர் வெளியேயிருந்து அடியவர்கள் உள்ளே செல்லும் நடைமுறை பின்பற்றப்படும்.
கொரோனா சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பேணியும் கலாசார உடை அணிந்தும் வருகை தரும் அடியவர்கள் மாத்திரமே வழிபாடுகளுக்காக ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாண்டு மஹோற்சவ காலப் பகுதியில் அன்னதானப் பணிகளோ, தண்ணீர்ப் பந்தல்களோ மற்றும் ஆலய உட்பகுதியில் வியாபார நிலையங்களோ அமைப்பதற்கு அனுமதியில்லை.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளும் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.