ஆறு மாதங்களுக்குள் என்னால் முடியாவிட்டால் வீடு செல்வேன் – அமைச்சர் தம்மிக்க சத்தியம்.
“ஆறு மாதங்களே என் இலக்கு. அந்தக் காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்ய முடியாவிட்டால் பதவி துறந்து வீடு செல்வேன்.”
– இவ்வாறு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ‘360’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மக்கள் பட்டினியால் வாடினால், நாம் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை. ஆக, சென்று எதையாவது செய் எனக் கூறியே அம்மா என்னை நாடாளுமன்றம் அனுப்பிவைத்தார்.
6 மாதங்களுக்குள் உங்களாலும் முடியாவிட்டால் – பதவி துறந்து வாருங்கள் என மனைவியும் அறிவுரை வழங்கியுள்ளார். அதேபோல ‘தாத்தா கம் ஹோம்’ (‘அப்பா வீட்டுக்கு வாங்க’) எனப் பதாகை ஏந்தப்படும் எனப் பிள்ளைகளும் அறிவித்துவிட்டனர்.
அந்தவகையில் எனக்கான காலம் 6 மாதங்கள். எனக்கு வேலை செய்வதற்கான காலம் இது. அந்தக் காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்யாவிட்டால், ‘தாத்தா கம் ஹோம்’ எனக் கூறி பிள்ளைகள் வந்துவிடுவார்கள். அப்போது எனக்கு வீடு செல்ல வேண்டிவரும்.
என்னைப் போல் ஒருவருக்கு 6 மாதங்களுக்குள் மக்களுக்கு முன்னேற்றகரமான (பொசிடிவாக) – எதையாவது செய்ய முடியாவிட்டால், பதவி வகித்து என்ன பயன்?” – என்றார்.
அத்துடன், தனது பணி இலக்குகளையும் தம்மிக்க பெரேரா பட்டியலிட்டு ஆவணமொன்றை வெளியிட்டுள்ளார். டொலர்களை உள்ளீர்ப்பதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டார்.
வங்குரோத்தடைந்த கம்பனிகளைப் பொறுப்பேற்று, அதனைக் கட்டியெழுப்பும் நிர்வாகத் திறன் உள்ள தனக்கு, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சவாலையும் வெற்றிகொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அமைச்சர் தம்மிக்க பெரேராவுக்கு கிடைத்துள்ள பொறுப்புகள்:-
1. இலங்கை முதலீட்டுச் சபை
2. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு
3. கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான திட்டம்
4. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
5. கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட்
6. டெக்னோ பார்க் டெவலப்மெண்ட் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட்
7. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்