ஆன்லைன் ரம்மிக்கு எதிராக புதிய சட்டம் தேவை – நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரை

ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் பொது மக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழப்பதுடன், அதன் காரணமாக கடன் தொல்லை மற்றும் கடும் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். இதனால் பல்வேறு சமூக பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்வதை அரசின் கவனத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள் கொண்டு வந்தன.
இதனையடுத்து, கடந்த 10 ஆம் தேதி, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக் கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்க குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்தக் குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு தனது அறிக்கையினை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று அளித்தது.
71 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளால் பொதுமக்களின் உடல்நலம் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது என்றும், ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தை கைவிட்டு, புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க அவசர சட்டம் இயற்றுவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.