சோனியா காந்தி உதவியாளர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளர் பிபி மாதவன் (71) மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதியப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளராக 71 வயதான பிபி மாதவன் இருந்து வருகிறார். இவர் மீது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டல் விடுத்ததாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 மற்றும் 506ன் கீழ் டெல்லி உத்தம் நகர் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25-ம் தேதி மாதவன் மீது அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். மாதவன் மீதான புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக துவாரகா இணை காவல் ஆணையர் ஹர்ஷ் வர்த்தன் கூறியுள்ளார்.
முதல்கட்ட தகவல்களில்படி, தலித் பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாகவும் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி மாதவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் மறைந்த கணவர் 2020ம் ஆண்டு காலமாகும் வரை டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றியுள்ளார்.
இதனிடையே தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் மாதவன் தெரிவித்துள்ளார். மேலும், புகார்தாரர் மற்றும் அவருக்குப் பின்னால் உள்ளவர்களால் எனக்கு எதிராக நடத்தப்படும் அவதூறு பிரச்சாரத்தை நான் கண்டிக்கிறேன், மேலும் சமூகத்திற்கு அவர் செய்த சேவைக்காக அறியப்பட்ட ஒரு புகழ்பெற்ற 71 வயதான மனிதனின் நற்பெயரை இழிவுப்படுத்துவதற்காக தூண்டுப்பட்டதாக இதனை கருதுகிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.