நடிகை மீனாவின் கணவர் காலமானார்… நுரையீரல் பிரச்சனையால் உயிர் பிரிந்தது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலருடன் நடித்துள்ளார்.
மீனாவுக்கு கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. மீனாவின் கணவர் பெயர் வித்யாசாகர். இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் நடிகர் விஜயின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
மீனாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் தனது கணருடன் பெங்களூரில் வசித்து வந்தார். மேலும் சென்னையிலும் குடும்பத்துடன் அவர் தங்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதில் இருந்து இருவரும் மீண்டனர். இருப்பினும் கொரோனாவால் இருந்து மீண்டாலும் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு பக்கவிளைவுகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. நுரையீரல் பிரச்சனையால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் வித்யாசாகர் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். முன்னதாக கொரோனா பாதிப்புக்கு பிறகு வித்யாசாகருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சனை அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர் அடிக்கடி நுரையீரல் சீராக இயங்குவதற்கான சிகிச்சைகளை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகி உள்ளார்.
மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு 48 வயதே ஆகிறது. இந்நிலையில் தான் அவர் காலமாகி உள்ளார். மீனாவின் கணவர் வித்யாசாகர் இறப்புக்கு திரைத்துறையினர் மற்றும் மீனாவின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நடிகர் சரத்குமார் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛திரைப்பட நடிகையும், என் குடும்ப நண்பருமான நடிகை மீனா அவர்களின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் இறந்ததை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனா, நைனிகாவும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும்” என கூறியுள்ளார்.