கூட்டமைப்பு, ஜே.வி.பியுடன் இணைந்து அரசுக்கு எதிராக சஜித் அணி போராட்டம் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.) உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் பேச்சு நடத்தி, அரசுக்கு எதிராக பாரியதொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது சமகால அரசியல், பொருளாதார நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக அலசி ஆராயப்பட்டன.
அதன்பின்னரே – தற்போதைய அரசை விரட்டுவதற்குப் பாரியதொரு வேலைத்திட்டம் அவசியம் எனவும், அதனை உருவாக்க பிரதான கட்சிகளுடன் எதிர்வரும் 6 நாட்களுக்குள் பேச்சு நடத்தி இணக்கத்துக்கு வரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எனினும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சு நடத்தாதிருக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.